Latest:
ArticleGuidance Article

மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்கலாமா ? தனியார் பள்ளியில் சேர்க்கலாமா?

தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து கொண்டே வருகின்றது. தனியார் பள்ளியில் படித்தால் மட்டும் தான் கல்வி அறிவு பெற முடியும், ஒழுக்கம் உள்ள மாணவர்களாக வர முடியும் என்பது போன்ற பிம்பம் உருவாக்கப்பட்டு ஏழை பெற்றோர்கள் கூட கடன் வாங்கி தனியார் பள்ளியில் சேர்க்கும் நிலை உருவாகிவருகின்றது. தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசதி படைத்தவர்கள் கூட செலுத்த முடியாத அளவிற்க்கு உயர்ந்துள்ளது. பிள்ளைகளின் பள்ளிகூட கட்டணத்திற்க்காவே உழைக்க கூடிய பெற்றோர்கள், குறிபிட்ட பள்ளியில் படிக்கவைக்க வேண்டும் என்பதற்க்காகவே இருப்பிடத்தை மாற்றும் பெற்றோர்கள் இருக்கின்றார்கள்.

கல்வியையும் மருத்துவத்தையும் வியாபாரமாக்கி நாம் சம்பாதிக்கும் பொருளாதாரத்தில் பெருபாலான பணம் கல்விக்கும் மருத்துவத்திற்க்கும் செலவாகின்றது. உண்மையில் தனியார் பள்ளிகளில் படித்தால் தான் கல்வி அறிவு கிடைக்குமா ? அரசு பள்ளியில் படித்தால் மாணவர்கள் எதிர்காலத்தில் கல்வியில் சிறந்து விளங்க முடியாதா? அரசு பள்ளியில் படித்தால் மாணவர்கள் ஒழுக்கங்கெட்டவர்களாக மாறிவிடுவார்களா ? இதன் உண்மை தன்மையை பார்ப்போம்.

அரசு பள்ளியில் படித்தால் கல்வியில் சிறந்து விளங்க முடியாதா ?

இந்திய சுதந்திரம் அடைந்ததிலிருந்து அரசு பள்ளியில் படித்த பெரும்பாலான மாணவர்கள் கல்வி, அறிவியல் , விஞ்ஞானம் தொழில் நுட்பம் , மருத்துவம் என அணைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். இன்று தனியார் பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க ஆரவம் காட்டும் பெற்றோர்களில் பலர் அரசு பள்ளியில் படித்தவர்கள்தான். எனவே அரசு பள்ளியில் படித்தால் கல்வியில் சிறந்து விளங்க முடியாது என்பது பொய்யான வாதம், இப்படிபட்ட பொய்யான பரப்புரை மூலம் தான் தனியார்கள் பள்ளிகள் அப்பாவி பெற்றோர்களை ஏமாற்றி கட்டண கொள்ளை அடிக்கின்றன அரசு பள்ளியில் படித்தவர்கள் உலகின் தலை சிறந்த மருத்துவர்களாக, விஞ்ஞானிகளாக தொழில் நுட்ப முன்னோடிகளாக இருக்கும் போது அரசு பள்ளியில் படித்தால் கல்வியில் சிறந்து விளங்க முடியாது என்பது ஏற்புடைய வாதம் அல்ல.

தனியார் பள்ளியில் தினமும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகின்றார்கள், பாடம் எடுக்கின்றார்கள், வீட்டுபாடம் ( ஹோம் வொர்க் ) கொடுகின்றார்கள் ஆனால் அரசு பள்ளியில் ஆசிரியர்கள் வகுப்பிற்க்கு சரியாக வருவதில்லை, குறைந்த அளவே பாடம் எடுகின்றார்கள், வீட்டு பாடம் தருவதில்லை அல்லது வீட்டுபாடம் எழுதவில்லை என்றால் கண்டிப்பதில்லை எனவே அரசு பள்ளியின் கல்வி தரம் குறைந்ததுதானே என்ற எண்ணம் பெற்றோர்களுக்கு ஏற்படுவது இயற்கையே. உண்மையில் தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஸ்பூன் ஃபீடிங் என்று சொல்லப்படும் முறையில், எப்படி படிக்க வேண்டும், எதை மனம் செய்ய வேண்டும், எப்படி எழுதவேண்டும் என அனைத்தையும் வரையறுத்து மாணவர்களுக்கு போதிக்கின்றனர், இதில் மாணவர்கள் சுயமாக முயற்சி செய்து கற்பதற்க்கோ, சுயமாக சிந்தித்து படிப்பதற்க்கோ தேடி திரிந்து கல்வி அறிவை பெறுவதற்க்கோ வேலை இல்லை.

அரசு பள்ளிகளில் மாணவர்களின் நலனில் அக்கரையுடன் சிறந்து பயிற்றுவிக்கும் ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள், இருந்தாலும் பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் முழுபாடதிட்டத்தையும் பயிற்றுவிக்க மாட்டார்கள், ஸ்பூன் ஃபீடிங் முறையில் முழுவிளக்கத்தையும் சொல்லி தரமாட்டார்கள், எனவே அரசு பள்ளியில் பயிலும் மாணவன் கல்வியில் ஆர்வமுள்ளவனாக இருந்தால் பாடங்களின் விளக்கத்தை சுயமாக சிந்தித்து புரிந்து கொள்ள முயற்சி செய்வான் , தேடி திரிந்து அலைந்து கல்வியை கற்ற முயற்சி செய்வான், கல்வியை கற்க முயற்சி கடுமையாக இருக்கும் போது நாம் கற்ற கல்வி நம் மனதில் பதியும், நான் கல்வி அறிவை பெருவதற்க்கான பொருப்பு என் ஆசிரியரை சேர்ந்தது அல்ல அது என்னை சேர்ந்தது, நான் தான் என் கல்வி அறிவிற்க்கு பொருப்பு என்ற எண்ணம் மாணவர்களை கல்வியை நோக்கிய ஈர்ப்பையும் அதன் முக்கியதுவத்தையும் உள்ளத்தில் ஏற்படுத்தும்.

உதாரணத்திற்க்கு நாட்டு கோழி , பிராய்லெர் கோழி எடுத்துகொள்ளுங்கள் (கருத்தை விளங்கிகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த உதாரணம் சொல்லபடுகின்றது யாரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை). இறைச்சிக்காக வளர்க்கப்படும் பிராய்லெர் கோழிகள் இறையை தேடி திண்பதில்லை, உணவு, தடுப்பூசி என அனைத்தும் பிராய்லெர் கோழி இருக்கும் இடத்திலேயே கொடுக்கபடும், இறைசியும் நாட்டு கோழியை விட பிராய்லெர் கோழியில் கூடுதலாக இருக்கும் ஆனால் சத்துள்ள பிராணியாக பிராய்லெர் கோழிகள் இருப்பதில்லை, நாட்டு கோழிகள் இறையை தேடி தின்பவை, பெரும்பாலும் தடுப்பூசி போடபடுவதில்லை, இறைச்சி குறைவாக தான் இருக்கும் ஆனால் சத்துள்ள பிராணியாக இருக்கும் , பெரும்பாலான தனியார் பள்ளிகள் மாணவர்களை மதிப்பெண் எடுக்கும் ஜீவராசியாகவே உருவாக்குகின்றனர். அரசு பள்ளியில் மாணவர்கள் கல்வியை சுயமாக முயற்சி செய்துதான் பெற்றுகொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது, இது மாணவர்களின் கல்வி அறிவிற்க்கு நல்லது.

அதிக பாடங்களை போதிப்பதினால் தனியார் பள்ளிகள் சிறந்ததாகிவிட முடியாது, அதிகமான பாடங்கள் படிப்பதைவிட குறைந்த பாடமாக இருந்தாலும் ஆழந்து படிப்பதே சிறந்தது. தனியார் பள்ளிகள் கல்வி போதிப்பதில் மோசம் என குறிபிட்டவில்லை, கல்வியில் சிறந்து விளங்குவது என்பது மாணவர்களின் கல்வி ஆர்வத்தை பொருத்ததுதானே தவிர பள்ளியின் கல்வி தரத்தை பொருத்தது அல்ல.

நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மாணவர்கள் அரசு பள்ளியில் படித்தாலும், தனியார் பள்ளியில் படித்தாலும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள், எனவே பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்க எந்த தனியார் பள்ளியில் சேர்க்கலாம் என யோசிப்பதற்க்கு முன் பிள்ளைகளுக்கு கல்வியில் எப்படி ஆர்வமூட்டுவது என சிந்தியுங்கள், பிள்ளைகளுக்கு கல்வியில் ஆர்வமூட்டுங்கள் அவர்கள் அரசு பள்ளியில் படித்தாலும் கல்வியில் சிறந்துவிளங்குவார்கள், தனியார் பள்ளியை தேடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை

தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளை :

பெரும்பாலனா தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தைவிட அதிகமான கட்டணத்தைதான் வசூலிக்கின்றன. வசதி இல்லாத பெற்றோர்களும் கடன் வாங்கி, சிலர் வட்டிக்கு வாங்கி பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தும் அவல நிலையை பார்க்க முடிகின்றது. பெற்றோர்கள் சட்ட ரீதியாக போராடினாலும் தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கப்போவதில்லை. அரசு அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை லஞ்சம் கொடுத்து பள்ளிகூடம் நடத்துவதால் பெற்றோர்களால் பள்ளி நிர்வாகத்தை ஒன்றும் செய்ய முடியாது. இதற்க்கு என்னதான் தீர்வு என யோசித்தால் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்கவைப்பதுதான் தீர்வாகும்.

அல்லாஹ் பொருளாதாரத்தை வாரி வழங்கி இருந்தால் தனியார் பள்ளியில் படிக்கவைப்பதில் தவறில்லை, ஆனால் கடன் வாங்கி வட்டிக்கு வாங்கி தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

தனியார் பள்ளியில் படித்தால்தான் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கமுடியுமா ?

தனியார் பள்ளியின் மோகத்திற்க்கு மற்றுமொறு காரணம் மாணவர்களின் ஒழுக்கம், அரசு பள்ளியில் படித்தால் ஒழுக்கமில்லாமல் போய்விடும், தனியார் பள்ளியில் படித்தால்தான் ஒழுக்கமுள்ளவர்களாக இருப்பார்கள் என்ற சிந்தனை பெரும்பாலான பெற்றோர்கள் மத்தியில் உள்ளது. நாம் நம் பிள்ளைகளுக்கு இஸ்லாத்தை சிறந்த முறையில் போதித்தால், அவர்களுக்கு முன் உதாரணமாக பெற்றோகள் ஒழுக்கமாக நடந்து காண்பித்தால் நம்பிள்ளைகள் ஒழுக்கமாக வளர்வார்கள் (இறைவன் நாடினால்),

அரசு பள்ளியில் படித்தவர்கள் ஒழுக்கமில்லாதவர்கள் என்றால் தனியார் பள்ளியில் படிப்பவர்களிலும் ஒழுக்கம் இல்லாதவர்கள் இருக்கின்றார்கள், ஏன் இஸ்லாமிய சட்டங்களை போதிக்கும் மதரஸாவில் கூட சில ஒழுக்கம் இல்லாத மாணவர்கள் இருக்கின்றார்கள் இன்னும் சொல்ல போனால் மார்க்கத்தை பிரச்சாரம் செய்யும் தலை சிறந்த பேச்சார்களிலும் ஒழுக்கம் இல்லாதவர்கள் இருக்கின்றார்கள், எனவே மாணவர்களை இறைஅச்சத்தோடு வளர்ப்பதே அவர்களை ஒழுக்க கேடான விஷயங்களில் இருந்து தடுக்கும், பிள்ளைகளுக்கு இறை அச்சத்தை போதியுங்கள், அதை பள்ளிகூடத்தின் தலையில் கட்டிவிட்டு தப்பித்துவிடலாம் என எண்ணாதீர்கள்,

எல்லா நபிமார்களும் ஒழுக்கங்கெட்ட சமூகத்தில் வாழ்ந்து ஒழுக்கத்தை போதித்து , தாமும் ஒழுக்கத்தோடு வாழ்ந்தார்கள். எனவே தனியார் பள்ளியில் படித்தால்தான் ஒழுக்கத்தோடு மாணவர்கள் வளர்வார்கள் என்பது ஏற்புட வாதமில்லை, இறை அச்சமும் தொழுகையும் நம்மை ஒழுக்ககேட்டில் இருந்து காக்கும், ஒழுக்கத்திற்க்கு தனியார் பள்ளியை தேடுவதை விட பிள்ளைகளை இறை அச்சவாதிகளாக மாற்ற முயற்சி செய்யுங்கள் , நமது பிள்ளைகள் ஒழுக்கமில்லாதவர்களாக வளர்ந்தால் அல்லாஹ் பெற்றோகளைதான் மறுமையில் கேள்வி கேட்பான், ஆசிரியர்களை அல்ல என்பதை நினைவில் வையுங்கள்.

அரசு பள்ளியில் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் கவனத்திற்க்கு :

1. மாணவர்களுக்கு கல்வியின் மீது ஆர்வம் ஊட்டுங்கள், மாணவர்கள் படிப்பதை தினமும் கவனித்து வாருங்கள், அவசியம் ஏற்பட்டால் குறிபிட்ட பாடங்களுக்கு டியூஷன் வையுங்கள். நன்றாக படிப்பதினால் ஏற்படும் நன்மைகளை எடுத்துகூறுங்கள், கல்வியில் சிறந்து விளங்குவதற்க்கான அவசியத்தையும் , காரணங்களையும், தேவைகளையும் விளக்கி ஆர்வமூட்டுங்கள்

2. பாடதை நன்றாக கற்க அல்லாஹ்விடம் பிராத்திக்க சொல்லுங்கள், கல்வி கற்பதில் வெட்கம் கூடாது என்ற இஸ்லாமிய வழிமுறையை எடுத்து சொல்லி தெரியாதை தெரிந்த மாணவர்களிடமோ ஆசிரியர்களிடமோ கேட்டு தெரிந்து கொள்ள சொல்லுங்கள்

3. மாணவர்களுக்கு இஸ்லாமிய ஒழுக்க நெறிகளை சொல்லிகொடுங்கள், கெட்ட நண்பர்களின் பழகத்தினால் ஏற்படும் தீய்மைகளை எடுத்து சொல்லுங்கள், இறைஅச்சத்தை வளர்க்கும் அறிவுறைகளை கூறுங்கள், அல்லாஹ்வின் தண்டனையை பற்றி எச்சரிக்கை செய்யுங்கள், அல்லாஹ்வின் அருளை பெறும் நற்செயலை பற்றி ஆர்வ மூட்டுங்கள்.

4. தினமும் மாணவர்களை கண்கானியுங்கள், உலக கல்வி கற்பதிலும் , மார்க்க கல்வியை அறிந்து கொள்வதிலும் அவர்களுக்கு தேவைபடும் உதவியை செய்யுங்கள்

அரசு பள்ளியில் சேர்ப்பதினால் ஏற்படும் நன்மைகள்:

1. பெரும் பொருளாதாரம் மிச்சமாகும், அரசு பள்ளியில் கட்டணங்கள் சில நூறு ரூபாய்கள்தான், ஷூ, சாக்ஸ், ஸ்மார்ட் கிளாஸ் , தேவை இல்லாதா நோட், புத்தங்கள் என எந்த வீண் செலவுவும் இல்லை.

2. மாணவர்களுக்கு மன அழுத்தும் (மென்டல் ஸ்ட்ரஸ் ) இருக்காது, அரசு பள்ளிகளில் பெரும்பாலும் குறைவான பாடங்களே இருக்கும் , விளையாட, இஸ்லாமிய கல்வி கற்க மாணவர்களுக்கு நேரம் இருக்கும்

3. தினமும் பெற்றோர்கள் மாணவர்களை கண்காணிப்பதினால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நல்ல புரிதல் இருக்கும்.

4. மார்க்க கல்வியை பெற்றோர்களே மாணவர்களுக்கு போதிப்பதினால் மாணவர்கள் பெற்றோர்கள் மீது நல்ல மரியாதை வைத்து இருப்பார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *