குறைவாக மதிப்பெண் எடுத்தவர்கள் என்ன படிக்கலாம் ?
மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்பை படிப்பதற்க்கு பெரிதும் உதவியாக இருப்பது அவர்கள் எடுக்கும் மதிப்பெண் தான். எதிர்பார்த்த அளவிற்க்கு மதிப்பெண் கிடைக்கவில்லை என்பது பெரும்பாலான மாணவர்களின் குறை. +2-ல் 700 மதிப்பெண் எடுத்து பாஸ் ஆகிவிட்டோமே என சந்தோசப்படும் மாணவர்களும் இருக்கின்றார்கள், 1100 மதிப்பெண் எடுத்து, 1150 மதிப்பெண் கிடைக்க வில்லையே என வருத்தப்படும் மாணவர்களும் இருக்கின்றார்கள்.
எனவே “குறைவான மதிப்பெண்” என்பது நம்முடைய எதிர்பார்ப்பை பொருத்தது, மாணவர்களே நீங்கள் எதை குறைவாக மதிப்பெண் என நினைக்கின்றீர்களோ அதை மிக அதிக மதிப்பெண்னாக நினைக்கும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள், குறைவு என்பது நீங்கள் நினைத்தைவிட குறைவு தானே தவிர, உண்மையில் அது குறைவான மதிப்பெண்னே அல்ல.
எனவே எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என வருத்தபட வேண்டாம். இறைவன் எதை நமக்கு வழங்கினானோ அதுவே சிறந்தது. போனது போகட்டும் இனிமேலாவது நன்றாக படிக்க வேண்டும் என முடிவெடுங்கள், கடந்தகால தவறுகளை நீக்கி, படிப்பில் ஆர்வம் காட்டி, கடினமாக உழைத்து படியுங்கள். நிச்சயம் நீங்கள் எடுத்த மதிப்பெண்னிற்க்கு ஏதாவது ஒரு கல்லூரியில் ஏதாவது ஒரு படிப்பில் இடம் கிடைக்கும், எந்த இளநிலை (UG) டிகிரி படிப்பிற்க்கும் முதுகலை (PG) படிப்பு இருக்கும் நீங்கள் இளநிலை (UG) படிப்பில் நன்றாக படித்தால் நீங்கள் விரும்பும் முதுகலை (PG) படிப்பை புகழ் பெற்ற கல்லூரிகளில் படிக்க முடியும், எனவே இது இறுதி அல்ல, வாய்ப்பு இன்னும் உள்ளது என்பதை மறவாதீர்கள்.
குறைவாக மதிப்பெண் எடுத்தவர்கள் என்ன படிக்கலாம் ?
குறைவான மதிப்பெண் எடுப்பதனால் வரும் முதல் பாதிப்பு நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்காது, பரவாஇல்லை, கிடைக்கும் கல்லூரியில் பிடித்த படிப்பை தேர்ந்தெடுங்கள், உதாரணத்திற்க்கு B.Com படிக்க விரும்பி இருப்பீர்கள், நல்ல கல்லூரியில் B.Com இடம் கிடைக்க 1000 மதிப்பெண்னுக்கு மேல் இருக்க வேண்டும், நீங்கள் 850 மதிப்பெண் எடுத்து இருந்தால் ஏதாவது அரசு கல்லூரியில் கலை முயற்சி செய்து பாருங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது. பொறியியல் படிப்பை அண்ணா பல்கலை கழகத்தில் படிக்க விரும்பி இருப்பீர்கள், மதிப்பெண் குறைவாக எடுத்தால் வீட்டிற்க்கு அருகில் உள்ள தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படியுங்கள்.
தரமில்லாத கல்லூரியில் படித்தால் நன்றாக படிக்கமுடியாதே என்ன செய்வது ?
தரமில்லாத கல்லூரியில் படித்தால் பாடங்கள் நன்றாக பயிற்றுவிக்கப்படாது. ஆனால் பாடங்களை கற்பதற்க்கு கல்லூரிகள் மட்டும் இடம் இல்லை, நீங்கள் எந்த பாடம் படித்தாலும் அதை சார்ந்த சிறந்த வகுப்புகள் இணைய தளங்களில் இலவசமாக (வீடியோ வடிவில்) கிடைக்கின்றன. அதை பார்த்து சிறந்த முறையில் படிக்கலாம். உதாரணத்திற்க்கு உலகின் தலை சிறந்த பொறியியல் கல்வி நிறுவனமான அமெரிக்காவில் உள்ள MIT-யின் வகுப்பு பாடங்கள் ஆன்லைனில் இலவசமாக கிடைக்கின்றன. நீங்கள் ஏதாவது சாதாரண கல்லூரியில் பொறியியல் படித்துகொண்டு MIT-யின் வகுப்பு பாடங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பார்த்து உலகின் தலை சிறந்த கல்வியை இலவசமாக கற்கலாம்.
எனவே மதிப்பெண் குறைவாக எடுத்தால் நீங்கள் விரும்பிய படிப்பு எந்த கல்லூரியில் கிடைக்கும் என தேடி பார்த்து அது கல்வி தரம் குறைவான கல்லூரியாக இருந்தாலும் சேர்ந்து படியுங்கள், உங்களின் கல்வி தரத்தை நீங்கள் சொந்த முயற்சி (self study) மூலம் உயர்த்திகொள்ளுங்கள்.
விரும்பிய பாட பிரிவு கிடைக்கவில்லையா ? என்ன செய்வது ?
மிக மிக குறைவாக மதிப்பெண் எடுத்தால் சாதாரண கல்லூரியில் கூட விரும்பிய பிரிவு கிடைக்காது. உதாரணத்திற்க்கு +2 – ல் 650 மதிப்பெண் எடுத்தால் எந்த கல்லூரியிலும் B.Com கிடைக்காது. இந்த சூழ்நிலையில் கிடைக்கும் படிப்பை எடுத்து படியுங்கள். எந்த படிப்பை எடுத்து படித்தாலும் நன்றாக படித்தால் எதிர்காலம் சிறப்பாகவே அமையும் (இறைவன் நாடினால்).
குறைந்த மதிப்பெண்னிற்க்கு பிரிவுவாரியாக என்ன படிக்கலாம் ?
கணித/அறிவியல் பிரிவு மாணவர்கள் :
B.Sc (mathematics), B.Sc (chemistry ) , B.Sc (physics) படிக்கலாம், ஆங்கிலம் நன்றாக வரும் என்றால் B.A English, B.B.A படிக்கலாம். இந்த படிப்புகள் எல்லாம் நீங்கள் எவ்வளவு குறைவாக மதிப்பெண் எடுத்தாலும் கிடைக்கும், B.Sc நன்றாக படியுங்கள் M.Sc (mathematics), M.Sc (chemistry) , M.Sc (physics) படிப்பை IIT மற்றும் அண்ணா பல்கலை கழகத்தில் படிக்க நுழைவு தேர்வுகள் உள்ளன அதை எழுதி தேர்சி பெற்று M.Sc படிக்க முயற்சி செய்யுங்கள், அது கிடைக்காவிட்டாலும், M.Sc படிப்பிற்க்கு நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன. B.Sc படிக்கும் காலத்தில் அரசு தேர்விற்க்கு தயாராகுங்கள், தேர்வில் தேர்சி பெற்றால் டிகிரி முடித்து அரசு வேலைக்கு செல்லலாம். மருத்துவ துறையில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன அதில் சேர முயற்சி செய்யலாம், குறைவான மதிப்பெண் எடுத்தாலும் இது கிடைக்கும் , ஆனால் தனியார் நிறுவனத்தில் படிப்பதினால் பொருளாதாரம் அதிகமாக செலவாகும்
கணக்கியல் / பொருளாதாரம்/ வரலாறு மாணவர்கள் :
B.A (economics) , B.A (history) படிக்கலாம், தேசிய பல்கலை கழகங்களில் M.A (economics) படிக்க நுழைவு தேர்வுகள் உள்ளன, அதை எழுதி தேர்சி பெற்றால் புகழ் பெற்ற தேசிய பல்கலை கழகங்களில் சிறந்த மேற்படிப்பு (PG) படிக்கலாம், ஊடக துறை (journalism) படிப்புகள் படிக்கலாம், அரசு வேலைக்கான நுழைவு தேர்விற்க்கும் படிக்கலாம். ஆங்கிலம் நன்றாக வரும் என்றால் B.A English, B.B.A/M.B.A படிக்கலாம்.
10- ம் வகுப்பில் குறைவாக மதிப்பெண் எடுத்தவர்கள் என்ன படிக்கலாம் ?
முடிந்தவரை கணித / அறிவியல் பிரிவு (first group or pure science) எடுக்க முயற்சி செய்யுங்கள், நீங்கள் விரும்பும் பள்ளி கூடத்தில் கிடைக்காவிட்டாலும், எந்த பள்ளியில் கிடைக்குமோ அந்த பள்ளியில் சேர்ந்து படியுங்கள். கணித / அறிவியல் பிரிவு (first group or pure science) கிடைக்காவிட்டால் வணிகவியல்/கணக்கியல் (Commerce and accounts) பிரிவை தேர்ந்தெடுங்கள், அதுவும் கிடைக்காவிட்டால் பொருளாதாரம் / வரலாறு (Economics and history) பிரிவை தேர்ந்தெடுங்கள். +1, +2 நன்றாக படித்து நல்ல மதிப்பெண் எடுக்க முயற்சி செய்யுங்கள்